Wednesday, February 25, 2004

தமிழ் கவிதைக் குழுவின் இரண்டாம் இணையக் கவியரங்க தொகுப்பு

பங்கு பெற்றவர்கள்:
கீதா ( மின்னஞ்சல் மூலம்)
உதயகுமாரி (நிலா) (மின்னஞ்சல் மூலம்)
கஜன் சண்முகரெட்ணம்
ஐயப்பன்
பிரபா
சைலஜா
கிருபாசங்கர்

பார்வையாளர்கள் :

ராமச்சந்திரன்
கணேசஷ்
************
எதிர்பார்ப்புகள்
************


1.

மன்னனை நினைத்த நெஞ்சில்
மாற்றங்கள் ஏதும் இல்லை
மாலை கைகூடி வருமோ?
மங்கையின் எதிர்பார்பிங்கே.

மகளின் மனம் அறிந்த பின்னும்
பழி யேதும் நேரா வண்ணம்
மங்கை மனம் மாறி வருமோ?
மற்றவளின் எதிர்பார்பிங்கே

ஓர்பழியும் நேர்ந்திடாமல்
உறவுகள் மனம் சூழ்ந்திருக்க
உறியவளின் கரம் பிடிக்க
மன்னனவன் எதிர்பார்பிங்கே..

மன்னன்,மங்கை மனம்மறிந்தும்
மற்றவர்கள் நிலை புறிந்தும்
மாற்றம் யேதும் நிகழ்ந்திடாதோ
நண்பர்களின் எதிர்பார்பிங்கே

கட்சிகள் ஒன்று எனும்போதும்
கருதுக்கள் மரித் தொன்றும்
மக்களின் பார்வைக்கேற்ப்ப
அவரவர் எதிர்பார்பிங்கே.
**************
By :கீதா
**************

2.

கவிதை பாடும் நெஞசங்களே!

தமிழால் நாம் இணைந்தோம்! - அவள்
தமிழாள் தாள் பணிவோம்! !

கவிதை புனைவததைத்தான் காதல் கொண்டேன்நான் - எனினும்
கடமை பெரிதெனவெண்ணி கல்விதனை கைப்பிடித்தேன்!
புவியதனில் இருதாரம் கொண்டவர் போல்த்தவித்தேன்!
நிலமைதனை உரைத்தேன்! நீவிரனுசரித்தால் பிழைத்தேன்!!!

எதிர்பார்ப்பினில் தானெம் வாழ்வே ஓடுகிறது!
எதிர்ப்பாரெவர் தானிந்த வையகத்தின் ஓட்ட்த்தினிலே!
பள்ளிசெல்லும் குழந்தையின் மனதில்புள்ளி எதிர்பார்ப்பு!
அள்ளிக்கொஞ்சும் அன்னைக்க்கோ ஆயிரமெதிர்பார்ப்பு!

வெள்ளிக்கொலுசு மங்கைக்கு மன்சுநிறையெதிர்பார்ப்பு!
உள்ளவரை உலகிலெமக்கு இருக்குந்தான் எதிர்பார்ப்பு!
எதிர்பார்ப்பதால் தானெமக்குக் கிடைக்கும் ஏமாற்றமே -அதற்காய்
எதிர்பார்க்காமல் இருந்தால் எதுவுந்தான் கிட்டாதே!

எதிர்ப்பார்ப்பில் தானெங்கள் நாட்களுந்தான் ஓடுகிறதே!
எதிர்பார்ப்பதெல்லாம் நடந்தாலும் இருக்காதே

நன்றியுடன் நிலா
*******************************************

3.

அமாவாசை இரவில்
உடைத்து எறியப்பட்ட
நிலாத் துண்டுகள்
என்னைப் பார்த்து
கண் சிமிட்டுகிறது

அந்த நட்ஷத்திர துண்டில் நீ
எங்கிருக்கிறாய் என்று தான்
தெரியவில்லை....

என்னெதிர் வந்து
முட்டச்சிறகில் எனை மூடி
மல்லிகை கொண்டு
மஞ்சம் அமைத்து
கண்ணே மணியே
கொஞ்சுதல் வேண்டாம்

பசியறிந்து சோறூட்டி
தேவையறிந்து தாலாட்டி
மடிமீதெனை கிடத்தி
தாயாய் மாறவேண்டாம்

இங்கெனக்கு அறிவு தந்து
எத்தனையோ இடர்களிடை
காத்து வளர்த்த தந்தையாய்
வரவும் வேண்டாம்

நீயற்ற பொழுதுகள் என்றும்
நகக்கண்ணில் துளையிட்டு
அமிலத்தை ஊற்றியது போல்
சொல்லொண்ணா வலியினால்
உள்ளத்தை துளைக்கும்

உனை மறக்க விழி வலிக்க
கணினியுடன் நடு நிசி வரை
தினம் நடக்கும் போராட்டங்கள்
விழி அயர்ந்த நேரத்தில்
கனவுகளுடன் தொடரும்

எந்தன் கால்கள் ஒய்ந்திடும் நேரம்
எந்தன் கைகள் களைத்திடும் நேரம்
கண்களின் பார்வை மங்கிடும் நேரம்
என்னை எடுத்து மண்ணில் சேர்க்கும்
எட்டுக் கரங்களில் ஒன்றாய்
ஒரு நாள் வந்திடுவாயா ??

அன்புடன்
ஐயப்பன்

*************


4.

நிலம்
----------
மனிதா...
சுவாசத்தை இழக்கையில்
என்னுடன் சங்கமிக்கின்றாய்.
உனக்குமட்டும் ஏன் மரியாதை ?
என்னில் அசுத்தங்களை வாரி இறைக்கும் நீ
இறுதியில் நீயும் அசுத்தம் அடைந்தவனாய்
என்னுடன் சேர்கின்றாயே !

கண்ட இடத்தில் காறிவிட்டு
கைவீசும் திசையில் குப்பைபோட்டு
வாழ்வு காட்டும் நீ
ஆட்சி செய்யும் அரசாங்கம்
அநியாயக் குப்பைகளுக்கு
அந்நியச்செலாவாணி தரவேண்டுமோ ?
அதைக்கேட்க உனக்கேது நியாயம் ?
அடுத்தமுறை அதற்கென்ற இடத்தில் குப்பையை எறி !

நீர்
---------
என்னால் பல நன்மைகள்
பிரதிபலனாய்
எனக்கு அசுத்தங்கள்
தாகம் என்றால் என்னை நாடும் நீ
தகுந்த வேலை செய்யத்
தவறியதால் எனக்குத் தட்டுப்பாடோ ?

குளமெல்லாம் கூவாமாகுது
கங்கையெல்லாம் கட்டாந்தரையாகுது
கவனியாமல் இருந்துவிட்டு
கடைசியில் மற்றோர் மீது பழியோ ?

மேல்நாட்டைக் கவனித்தாயா ?
என்மகனாக மின்சாரம் வந்தான்
என் அசுத்த பாகங்கங்கள்
அவனால் சுத்தம்செய்யப்படுகின்றன
பல இடங்களில்
நீ மட்டும் என்னை
மேலும் மேலும்
அசுத்தம் செய்து கொண்டிருக்கின்றாய் .
உந்தன் சோம்பலுக்குச்
சற்றுத்தள்ளி முற்றுப்புள்ளி வை.
அதுவரை எனக்காக தொழிற்படப் புறப்படு


காற்று
---------
என்னை உள்ளிழுக்கும் நீ
வெளிவிடுகையில் அசுத்தத்தை
தருகின்றாயே !
தாவரத்தைக் கவனித்தாயோ ?
அது என்னைச் சுத்தப்படுத்த
நீ மட்டும் எந்தன் எதிரியாய் ஏன்தானோ ?

சமையல் வீட்டில் புகை
சத்தமிடும் தொழிற்சாலையிலும் புகை
சச்சரவான வாகனப்புகை

பொதுவாய்ப் பொறாமையில் புகையும் மனிதனே,
கொஞ்சம் கவனம் செலுத்து என்னில் !


ஆகாயம்
---------
அண்டவெளியின் பாதை நான்
அழகான காட்சி நான்
அந்தியிலே சிவந்தாலும்
என்நிறம் நீலம்தான்
என்னை ஆராயாது உறங்குவதேனோ ?

முகிலைக் கண்டு என்னை வெள்ளையென்பாய்
கங்குலைக் கண்டு கருப்பென்பாய்
மங்கையைக் கண்டு என்னை மறந்திருப்பாய்

மொத்தத்தில் விஞ்ஞானம் வேண்டாது
என்றன் அருமை மறப்பதேனோ ?

நெருப்பு
--------------
கதிரவன் உறங்குகையில்
என்னை அரவணைக்கும் மனிதா
தீ என்றால்
அழிப்பது என்ற எண்ணத்தில்
என்னை அவமதிப்பதேனோ ?

சுடரானால் சுகம் அளிக்கும் நான்
சுவாலையானால் சோகம் தருகின்றேன்.
சுடராக்குவதும் சுவாலையாக்குவதும் நீதானே ?

காற்று என்றன் சகோதரன்
எண்ணெய் என்றன் நண்பன்
வெப்பம் அதிகரிப்பின் நான் யமன்

மாயை நிறைந்த வாழ்விலிருந்து
உன்னை நான் மீட்கிறேன்
சில சமயங்களில்
அதற்கு நீ நன்றி சொல்ல மறந்ததேனோ ?
************

ஐம்பூதங்களுக்கு உயிர் கொடுத்த
அவதானி கஜன்

***************
5.


பிறந்தமண் விட்டுவந்து
. . பெற்றவர்கள் தூரநிற்க
இறக்கின்ற மனிதத்திற்கு
. . இறைவாநீ அருள்புரி

தனம்தேடி வனம்வந்து
. . தரம்கெட்ட வாழ்க்கைகண்டு
மனம்நோக வருந்துவோர்
. . வையகத்தில் கூடுதேகாண்

செப்புகின்ற மொழியினில்
. . செந்தமிழும் குறையுதிங்கு
எப்பொழுதும் எம்மவர்கள்
. . ஏன்தானோ எண்ணவில்லை

செய்கின்ற செயல்களும்
. . தென்படும் நிகழ்வுகளும்
மெய்யாக எடுத்துரைக்கும்
. . வேற்றாரின் கலாச்சரம்

அருந்துகின்ற உணவினிலே
. . அருஞ்சுவையும் இல்லாது
மறுக்கிறது மனமிங்கு
. . மரிக்கிறது மனிதநாக்கு

ஓய்வென்ற போதினிலே
. . உகந்தஅன்பு இல்லாமல்
தேய்வுதரும் குடிவகைகள்
. . தேடிவரும் பழக்கங்கள்

வயோதிபக் காலத்திலே
. . வாழ்வென்றும் தனிமையிலே
அயோக்கியனாய் பிள்ளைகளும்
. . .அருகேதான் வரமாட்டார்

கொட்டுகின்ற பனிமழையும்
. . கொல்லுகின்ற கடும்குளிரும்
தொட்டுவிட்டு துன்புறுத்தும்
. . தொடர்ந்துநின்று தொல்லைதரும்

நல்லதென்று நினைத்தேமே
. . நாடுபடுத்தும் சீரழிவில்
கொல்லப்படும் மனிதமனம்
. . சுகப்படும் நிலையுண்டோ ?

எதிர்பார்த்து எதிர்பார்த்து
. . ஏமாறும் மக்களது
முதுமையில்லா மூளைதானே
. . முட்டாளாய் ஆக்குதெம்மை

***************************
அவதானி கஜன்
***************************

6.

மின்னல்கள்
_________

தினம் விடியல்
கறுப்பான இதயத்திற்கு
மங்களமாய் மஞ்சள் தொட்டு
அழைப்பு விடுக்கும் சூரிய கீற்று

நேற்றைய தோல்விகள்
நீர்கோலமாய்
கண்ணீர் கோலமாய்
கறைந்து போகும்

கண்ணீரில்
கலந்த மை
திட்டுத்திட்டாய்
நினைவுகளாய் அப்பி நிற்க
இன்றைய நாள் மீண்டும்
ஏமாற தயாராகும் இதயங்கள்

பசிக்கு உணவும்
ருசிக்க உடலும்
புகழும் பணமும்
காதலும் இளமையும்
உறவும் நினைவும்
மதிப்பிட முடியா
பலதை தொலைத்து
பரிதவித்து உலக வீதியில்
எங்கெங்கோ தேடிக் களைத்து


ஏமாற்றத்தை மட்டுமே
பூசிக்கொண்டு
வீடு திரும்பும் பகடைக்காய்கள்

இதயராகம்
மீட்டும் பஞ்சப்பாட்டுக்கள்
பாலைவனத்தில் கள்ளியாய்
ஆங்காங்கே நட்சத்திர மின்னல்கள்

******************
சக்தி பிரபா


7.
வண்ணத்துப் பூச்சி
*************

இன்னும் வரவில்லை என் வண்ண்த்துப்பூச்சி,
நேற்றைக்கு இதெநேரம் இலைப்பச்சை
நடுவினிலே,இளமேனி தான்விரிந்த ,
மலர்மீது மது அருந்த வந்தது,
அடர்த்தியான பழுப்பு நிறத்தில்
கறுப்பு புள்ளிகளிட்ட இறக்கை
சட்டை அணிந்திருந்தது..
சில நேரங்களில் மலரைவிட
வண்னத்துப்பூச்சிகளே அழகாக உள்ளன,
அழகை ரசிக்கும் போதிலேயே
அது பறந்து போய்விட்டது,
இன்றைக்கும் வருமென்று
எதிர்பார்த்துக் கத்திருக்கிறேன்,
அது வேறு ஒருமலரைத்
தேடிப்போய்விட்டதை அறியாமல்...
**********

ஷைலஜா
**********************************

அன்பு நண்பர்களுக்கு!!

தமிழ் கவிதைக் குழுவின் முதலாமாண்டு இணையக் கவியரங்கம்
பங்குபெற்றோர் மற்றும் கவிதைகள்
<விரைவில்>
அன்புடன்
ஐயப்பன்